Saturday, April 27, 2013

சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் !!



இன்றைய மாணவர்கள் நினைத்தால் நாளைய தலைமுறையே நல்லதொரு தலைமுறையாக மாற்றி அமைக்கலாம் . அதற்க்கு அவர்களிடம் நல்ல ஆட்சி அல்லது அதிகாரங்கள் இருக்க வேண்டும் அதற்க்கு இளைமையில் கடுமையாக முறையான பயிற்சியும் முயற்சியும் இருத்தல் அவசியம்

இந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என்றழைக்கப் படும் இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களே மாவட்ட ஆட்சியர், மாநில முதன்மை செயலர், தலைமைத் தேர்தல் ஆணையர் என அனைத்துத் துறை முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.

அரசாங்கத்தின் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துபவர்கள் இப்பணியினரே. இதனால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முக்கியத்துவம் என்றும் குறையாமல் இருக்கிறது. இத்தேர்வு சம்பந்தமான விவரங் களைப் பார்ப்போம்.

சிவில் சர்வீசஸ் பணித் துறைகள்

சிவில் சர்வீசஸ் தேர்வானது 26-க்கும் மேற்பட்ட பணிகளுக்கான தேர்வாகும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இருபத்தியாறு பணித்துறைகளில் ஏதேனும் ஒன்றில் வாய்ப்புக் கிடைக்கிறது. அவை:

1. இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service)

2. இந்திய அயல்நாட்டுப்பணி (Indian Foreign Service)

3. இந்திய காவல் பணி (Indian Police Service)

4. இந்திய அஞ்சலகத் தந்திக் கணக்குகள் மற்றும் நிதி பணி, பிரிவு "அ' (Indian P & T Accounts & Finance Service, Group 'A')

5. இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கணக்கியல் பணி பிரிவு "அ' (Indian Audit & Accounts Service, Group 'A')

6. இந்திய சுங்கம் மற்றும் கலால் வரி பணி, பிரிவு "அ' (Indian Customs & Central Excise Service, Group 'A')

7. இந்திய பாதுகாப்புத்துறை கணக்குப் பணிபிரிவு "அ' (Indian Defence Accounts Service, Group 'A')

8. இந்திய வருவாய் பணி, பிரிவு "அ' (Indian Revenue Service, Group 'A')

9. இந்தியத் துப்பாக்கித் தொழிற்சாலைகள் பணிபிரிவு "அ' (உதவி மேலாளர், தொழில் நுட்பம் சாராதது) (Indian Ordinance Factories Service, Group 'A' Assistant Works Manager, Non-Technical)

10. இந்திய அஞ்சல் பணி, பிரிவு "அ' (Indian Postal Service, Group 'A')

11. இந்தியக்குடிமைக் கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Civil Accounts Service,Group 'A')

12. இந்திய இரயில்வே போக்குவரத்து, பணிபிரிவு "அ' (Indian Railway Traffic Service, Group 'A')

13. இந்திய இரயில்வே கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Railway Accounts Service, Group 'A')

14. இந்திய இரயில்வே பணியாளர்கள் பணி, பிரிவு "அ' (Indian Railway Personnel Service, Group 'A')15. இரயில்வே பாதுகாப்புப் படையில், உதவிப் பாதுகாவல் அலுவலர் பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Security Officer, Group 'A' in Railway Protection Force)

16. இந்தியப் பாதுகாப்பு நிலைகள் பணி, பிரிவு "அ' (Indian Defence Estates Service, Group 'A')

17. இந்திய தகவல் தொடர்புப் பணி, (இளநிலை) பிரிவு "அ' (Indian Information Service, (Junior Grade) Group 'A')

18. மையத்தொழிலகப் பாதுகாப்புப் படையில் உதவி ஆணையாளர், பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Commandant Group 'A' in Central Industrial Security Force)

19. மைய அரசு செயலகப்பணி, பிரிவு "B (பிரிவு அலுவலர் நிலை)

20. புகைவண்டி வாரியச் செயலகப் பணி, பிரிவு "B' (பிரிவு அலுவலர் நிலை)

21. ஆயுதப்படை தலைமையகக் குடிமைப் பணி பிரிவு "B' (குடிமக்கள் பணியாள் உதவி அலுவலர் நிலை)

22. சுங்கத்துறை மதிப்பீட்டாளர் பணி, பிரிவு "B'

23. தில்லி, அந்தமான்-நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி குடிமை பணி, பிரிவு "B'

24. தில்லி, அந்தமான்- நிகோபார் தீவுகள், இலட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி காவல் பணி பிரிவு "B'

25. புதுச்சேரி குடிமைப்பணி, பிரிவு "B

26. புதுச்சேரி காவல் பணி, பிரிவு "B'

இப்பணிகளுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்பதை இத்தேர்வு அறிவிப்பின் போது, எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழில் கொடுக்கப்பட்டிருக்கும். அக்காலியிடங்களுக்குத் தக்கவாறு இத்தேர்வு நடத்தப்படும்

தேர்வுத் திட்டம்

சிவில் சர்வீசஸ் தேர்வானது மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.

1. முதனிலைத் தேர்வு (Preliminary Exam)

2. பிரதானத்தேர்வு (Main Exam)

3. நேர்முகத்தேர்வு (Interview - Personality Test)

ஆகியவை ஆகும். முதனிலைத்தேர்வு எழுதி தகுதிபெற்றவர்கள் பிரதானத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது முதனி லைத் தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவுடன் யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு எழுத விண்ணப் பத்தை அனுப்பிவைக்கும். அதில் பிரதானத் தேர்வு விபரங்கள் அனைத்தும் அடங்கியிருக் கும். பிரதானத் தேர்வை எழுதி முடித்து அதில் வெற்றிப் பெற்றால் உங்களுடைய பிரதானத் தேர்வு மதிப்பெண்கள் கொண்ட தர வரிசையின் படி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் படுவீர்கள். நேர்முகத்தேர்வு முடிந்தவுடன் இறுதி முடிவு வெளியிடப்படும்.

பிரதானத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடப் படும். அதில் நீங்கள் விருப்பம் தெரிவித்த பணியை உங்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும்.

தேர்வு எழுத தகுதிகள்

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத விரும்புபவர் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கலை, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல் என ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு போதுமானது. அதே சமயம் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம். தொழில்நுட்பக் கல்வி படித்தவர்கள் தங்களது படிப்பு பட்டப்படிப்புக்கு இணையானது எனில் அவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் இளங்கலை பட்டங்கள் பெற்றவர்கள், முதுகலைப்பட்டம், ஆராய்ச்சிப்படிப்பு என அனைவரும் விண்ணப்பிப்பர்.

வயது வரம்பு:

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பப் பெற்ற இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதுவரை இத்தேர்வினை எழுதலாம். குறைந்தப் பட்ச வயது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து கணக் கிடப்படுகிறது. இந்த 21-30 வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.

அட்டவணை வகுப்பினர் (S.C.), அட்ட வணை பழங்குடியினர் (S.T.) 35 வயதுவரை இத்தேர்வை எழுதலாம்.

இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) அதாவது தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட் டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் (MBC) பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் மத்திய அரசு அளவில் இதர பிற்படுத்தப்பட் டோர் OBC ஆவர். இப்பிரிவினர் 33 வயது வரை இத்தேர்வை எழுதலாம். அதே போல உடல் ஊனமுற்ற பாதுகாப்புப் படைவீரர்களுக்கும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எதிரி நாட்டோடு போர்புரிந்து உடலுறுப்பு பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத ராணுவத் தினருக்கு மூன்று ஆண்டுகளும் (33 வயது வரை), குறைந்தது ஐந்து ஆண்டுகள் சேவை பணி முடித்த முன்னாள் இராணுவத்தினருக்கு ஐந்து ஆண்டுகளும் (35 வயது வரை) தளர்த்தப் பட்டுள்ளது.

எத்தனை முறை தேர்வு எழுதலாம்?

நாம் கல்லூரியில் படிப்புக்குரிய பாடங்களில் தேர்ச்சி பெறவில்லையெனில், மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம், எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆனால் சிவில் சர்வீசஸ் தேர்வு அப்படியல்ல. இத்தேர்வு எழுதுவதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது ஒருசில தடவை (Number of Attempts) மட்டுமே இத் தேர்வை எழுத முடியும். ஆனாலும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுப்பிரிவினர் நான்கு முறை மட்டுமே இத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தங்களின் வயது வரம்பிற்கு உட்பட்டு ஏழு முறை தேர்வை எழுதலாம்.

பட்டியல் வகுப்பினர் (SC/ST) தங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டு எத்தனை முறை வேண்டு மானாலும் தேர்வை எழுதலாம். தேர்வு நடை பெறும்போது ஒருமுறை தேர்வை எழுதி னாலும் எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளப் படும். அதனால் விதிக்கப்பட்டுள்ள கால வரம்புக்குள் நம் அறிவை கொண்டு தேர்வில் வெற்றிப் பெற்றிட வேண்டும்.

விண்ணப்பித்தல்

ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு களுக்கான அறிவிப்பானது Employment News வார இதழில் டிசம்பர் மாத கடைசி வாரத்தில் தேர்வு குறித்து Special Supplementary தனியாக வெளிவரும். அதில் தேர்வு குறித்த முழு விபரம் தரப்பட்டிருக்கும். அதையடுத்து முக்கியமாக, விண்ணப்பம் வாங்க வேண்டும். UPSC விண்ணப்பம் அனைத்து மாவட்டத் தலைமை அஞ்சலகங்களிலும் கிடைக்கும்.

முதனிலைத் தேர்வு (Preliminary Examination)

முதனிலைத் தேர்வில், ஒரு பொது அறிவுத்தாள் மற்றும் ஒரு விருப்பப் பாடத்திற் கான தேர்வு நடைபெறும். இந்தியாவில் பல மையங்களில் இத்தேர்வு நடைபெறும். தமிழகத்தில் ஒரே நாளில் சென்னை, மதுரை ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும். விருப்பப்பாடம் காலை நேரத்திலும், மாலை நேரத்தில் பொதுஅறிவுத் தேர்வும் நடத்தப் படுகிறது. விருப்பப்பாடத்தில் 120 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்கு 300 மதிப்பெண்கள். பொதுஅறிவுத்தாளில் 150 கேள்விகள் கேட்கப் படும். இதற்கான மதிப்பெண்கள் 150. ஆக இரண்டு தாள்களுக்கும் சேர்த்து 450 மதிப் பெண்களுக்கு முதனிலைத்தேர்வு நடத்தப் படுகிறது. வங்கித்தேர்வை போன்று நெகடிவ் மதிப்பெண்கள் இத்தேர்விலும் உண்டு. இத்தேர்வில் வெற்றிபெற வாய்ப்பு என்கிற போது சுமாராக சொன்னால், விருப்பப் பாடத்தில் 300 மதிப்பெண்களுக்கு குறைந்தது 250 மதிப்பெண்கள்-அதாவது 120 கேள்வி களுக்கு 100 கேள்விகள் சரியாக பதில் அளித்தால் போதுமானது.

பொது அறிவுத் தேர்வில் குறைந்தது 100 மதிப்பெண்கள் பெற்றால் போதும் முதனிலைத் தேர்வில் நீங்கள் வெற்றிபெற்று விடலாம். இந்த தேர்வு முதன்மைத் தேர்வு (Main Exam) எழுதுவதற்கான தகுதித் தேர்வு மட்டும்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

முதனிலைத் தேர்வு விருப்பப்பாடம்

சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் ஒரு விருப்பப்பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். இப்போது என்னென்ன விருப்பப் பாடங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary Science)

3. தாவரவியல் (Botany)

4. வேதியியல் (Chemistry)
5. கட்டுமானப் பொறியியல் ((Civil Engineering)

6. வணிகவியல் (Commerce)
7. பொருளாதாரம் (Economics)

8. மின் பொறியியல்(Electrical Engineering)
9. புவியியல் (Geography)
10. புவியமைப்பியல் (Geology)
11. இந்திய வரலாறு (Indian History)

12. சட்டம் (Law)
13. கணிதம் (Mathematics))
14. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)

15. மருத்துவ அறிவியல் (Medical Science)
16. தத்துவம் (Philosophy)
17. இயற்பியல் (Physics)

18. அரசியல் அறிவியல்(Political Science)

19. உளவியல் (Psychology)

20. பொது நிர்வாகம் (Public administration)

21. சமூகவியல் (Sociology)

22. புள்ளியியல் (Statistics)

23. விலங்கியல் (Zoology)
போன்ற 23 விருப்பப்பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் விரும்பும் விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தில் குறித்திட வேண்டும்.

பிரதானத்தேர்வு (Main Exam)

சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்றதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டவரே பிரதானத்தேர்வை எழுதத் தகுதிப் பெற்றவர் ஆவார். பிரதானத் தேர்வு என்பது எழுத்துத்தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு ஆகிய இரண்டையும் உள்ளடக் கியது. இதுவே இந்திய அரசின் பல்வேறு உயர்நிலை பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது. முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதானத் தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பப்படும். அதனைப் பெற்று மீண்டும் இத்தேர்வுக்காக விண்ணப் பிக்க வேண்டும். எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளனவோ அதைவிட 12 அல்லது 13 மடங்கு விண்ணப்பதாரர்கள் பிரதானத் தேர்வுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த பிரதானத்தேர்வுதான் உங்களின் வெற்றி மற்றும் பணியிடங்களை தீர்மானிக் கிறது. இத்தேர்வானது விண்ணப்பதாரரின் புத்திக்கூர்மையையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் மதிப்பீடு செய்வதாகும். இத்தேர்வு முழுக்க முழுக்க விரிவாக விடை யெழுதும் கட்டுரை வடிவிலான எழுத்துத் தேர்வு. இதில் உங்களின் பதில் அளிக்கும் திறனே முக்கியமானதாகும்.

பிரதானத்தேர்வு ஒன்பது தாள்களைக் கொண்டது

* தாள் I ஏதேனும் ஒரு இந்திய மொழி

(அரசியலமைப்பு அட்டவணையில் உள்ளடங்கிய இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பித்தவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)
இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் II ஆங்கிலம் (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் III கட்டுரை (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 200 மதிப்பெண்கள்

* தாள் IV (அ) பொது அறிவு - 1 இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் V (ஆ) பொது அறிவு - 2 இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் யஒ விருப்பப்பாடம் 1 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் VI விருப்பப்பாடம் 1 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் VII விருப்பப்பாடம் 2 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் VIII விருப்பப்பாடம் 2 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்

விருப்பப் பாடங்களைப் பொறுத்தவரை இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பாடத்திலிருந்து இரண்டு தாள்கள் 1 (அ) 1 (ஆ) & 2 (அ) 2 (ஆ) ) ஆக மொத்தம் நான்கு தாள்கள் (2x2=VI, VII, VIII, IX) எழுத வேண்டும். இது தவிர இரண்டு மொழித் தாள்கள் (I, II), இரண்டு பொது அறிவுத் தாள்கள் (IV, V), ஒரு கட்டுரை (III)ஆக மொத்தம் 9 தாள்கள் எழுத வேண்டும். இரண்டு மொழித் தாள்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இவைகளுக்கு மொத்தம் 2000 மதிப்பெண்கள் ஆகும்.

பிரதானத்தேர்வு விருப்பப் பாடத்திற்குத் தேர்வாணையத்தில் அனுமதிக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஏதேனும் இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பிரதானத்தேர்வுக்கான விருப்பப் பாடங்கள் :

1. வேளாண்மை (Agriculture)

2. கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary)

3. மானிடவியல் (Anthropology)

4. தாவரவியல் (Botany)

5. வேதியியல் (Chemistry)

6. கட்டடப் பொறியியல் (Civil Engineering)

7. வணிகவியலும் கணக்கியலும் (Commerce & Accountancy)

8. பொருளாதாரம் (Economics)

9. மின் பொறியியல் (Electrical Engineering)

10. புவியியல் (Geography)

11. புவியமைப்பியல் (Geology)

12. வரலாறு (History)

13. சட்டம் (Law)

14. மேலாண்மை (Management)

15. கணிதம் (Mathematics)

16. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)

17. மருத்துவ அறிவியல் (Medical Science)

18. தத்துவம் (Philosophy)

19. இயற்பியல்(Physics)

20. அரசியல் மற்றும் பன்னாட்டுத் தொடர்புகள் (Political and International Relations)

21. உளவியல் (Psychology)

22. பொது நிர்வாகம்(Public Administration)

23. சமூகவியல் (Sociology)

24. புள்ளியியல் (Statistics)

25. விலங்கியல் (Zoology)

26. இலக்கியம் (Literature)

(இது பின்வரும் ஏதேனும் ஒரு மொழி இலக்கியத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம்.)

1. தமிழ் 2. ஆங்கிலம் 3. மலையாளம் 4. தெலுங்கு 5. கன்னடம் 6. இந்தி

7. மராத்தி 8. உருது 9. ஒரியா 10. சமஸ்கிருதம் 11. குஜராத்தி 12. வங்காளம்

13. பஞ்சாபி 14. நேப்பாளி 15. சிந்தி 16. மணிப்பூரி 17. காஷ்மீரி 18. கொங்கணி

19. பாலி 20. பெர்சியன் 21. அஸ்ஸாமி 22. அரபு 23. சீனம் 24. பிரெஞ்ச்

25. ஜெர்மனி 26. ரஷ்யன்

பிரதானத்தேர்வில் இரண்டு விருப்பப் பாடங்கள் என்றாலும் சில விருப்பப் பாடங்களைச் சேர்த்து எழுத முடியாது.

நேர்முகத்தேர்வு (Personality Test)

பிரதானத் தேர்வில் தேர்வாணையத்தால் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் களை பெற்றவர்கள்- அவர்களின் ஆளுமையை சோதிப்பதற்காக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத்தேர்வு 300 மதிப்பெண்களைக் கொண்டது. (தகுதிக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் கிடை யாது) இதில் புத்திக்கூர்மை, நடப்பு நிகழ்வு களில் உள்ள அக்கறை, சமூக சேவை மனப் பான்மை, பாடத்தில் புரிந்துகொண்ட திறன், ஒழுக்கம், உடல்மொழி சமயோகித புத்தி, தலைமை தாங்கும் திறன் போன்றவற்றைச் சோதித்து அறிவார்கள். சுருக்கமாகக் கூறினால் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு நீங்கள் எவ்விதத்தில் பொருத்த மானவர் என்பது நேர்முகத் தேர்வில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இறுதியில் மெயின் தேர்வு மொத்த மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்கள் இரண்டையும் கூட்டி இந்திய அளவில் ரேங்க் பட்டியல் தயாரிப்பர். அதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற 26 பணிகளில் ஏதேனும் ஒன்றில் நியமிப்பர்.

No comments:

Post a Comment