வாழ்க்கையின் உண்மை அறிவோம்!!!
ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.
வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.
ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழ...ைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது
கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்.” என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.
அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.
அவன் கண்களை மூடினான். அப்பொழுது “நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.
உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.
1. நான்காவது மனைவி நம்முடைய உடல் அழகு . அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது.
2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.
3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.
4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.
எனவே வாழ்க்கையின் உண்மை அறிவோம்.
No comments:
Post a Comment