Monday, June 10, 2013

"என் மனைவி வேலை செய்வதில்லை"


செலவு சித்தாயம் தலைக்குமேல் ஏறியிருக்கிற இந்தக் காலத்தில் வேலை செய்யாத மனைவியால் என்ன பிரயோசனம்? என் மனைவி, தேவியைப் பற்றித்தான் சொல்கிறேன். உறவினர்களும் நண்பர்களும் கண்ட இடத்தில் இவளைக் கேட்பதுண்டு, “இப்ப எங்கை ‘வேர்க்’ பண்ணுறியள்?” இவள் பதிலுக்குச் சிரித்து மழுப்புவாள். இவள் வேலையைவிட்டுப் பத்து வருடமாகிறது. வேலையில் கெட்டிக்காரி என்றுதான் பெயரெடுத்தாள். ஆனால் என்ன கண்டது? இப்போ வேலை செய்வதில்லை.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிடுவாள். நான் ஏழு மணிக்கு வேலைக்குப் போகவேண்டும். எனக்கு வேண்டிய காலை உணவு, மதிய உணவு, இடையில் கடிக்க ஏதேனும் – இப்படி எனது அன்றாட மண்டகப்படி ‘லிஸ்ட்’ மிக நீண்டது. எல்லாவற்றையும் நாளுக்கு நாள் வெவ்வேறு சங்கதிகளுடன் மிக ருசியாக செய்து தருவாள். அதே சமயம் எனது நிறை கூடாமலும் முக்கியமாக என் இடுப்பு அளவு பருத்துடாமலும் பார்த்துக்கொள்வாள்.

ஆனால் அவள் மட்டும் வேலை செய்வதில்லை.

பிள்ளைகளைப் பள்ளிக்கு ஆயத்தப்படுத்துவதிலும் இதே கதைதான். அவர்களுக்குத் தலைமாட்டில் மணிக்கூடு கிடையாது. இவள்தான் அவர்கள் முதல் நாள் சொல்லிவிட்ட நேரத்துக்கு எழுப்பிவிடும் மணிக்கூடு. சாவி கொடுக்காமல், நேரம் ‘செற்’ பண்ணாமல் ஒரு நிமிடம்கூடப் பிந்தாமலும் முந்தாமலும் சொன்ன நேரத்துக்கு எழுப்புவதில் இவளுக்கு நிகரான மணிக்கூடு இன்னும் செய்யப்படவில்லை. அவர்கள் காலையில் எழும்பி வெளிக்கிட்டு வீட்டின் கீழ்த்தளத்திற்கு வரும்போது அவர்கள் மாடி அதிர எழுப்பும் ஓசையிலிருந்தே அவளுக்குத் தெரிந்துவிடும் அவர்களுடைய அவசரம் எந்த மட்டில் இருக்கிறதேன்று. அதேவேளை அவர்களுக்கு வேண்டியவற்றை – உணவு முதல் கைச்செலவுக்கும் கள்ளப் பணியாரத்துக்கும் வேண்டிய காசு வரை எல்லாம் அளவாகக் கொடுத்தனுப்புவாள். கொடுத்துக் கொண்டேயிருந்தால் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்பதில் அவளுக்கு நிறைந்த நம்பிக்கை. பின்னேரம் வந்தால் வளர்ந்த பிள்ளைகள் விஷயத்தில் இவள் தலையிடுவதில்லை. ஆனால் பிள்ளைகளைப்பற்றி எனக்குத் தெரியாத ருசியான சங்கதிகளெல்லாம் இவளுக்கு மட்டும் எப்படித்தான் தெரிகிறதோ? இவர்களின் முதல் நண்பர் தானே என்பதை அடிக்கடி நிரூபித்துக்கொள்வாள் போல் தெரிகிறது.

இவ்வளவு செய்தும் என்ன, அவள் வேலை செய்வதில்லை.

எங்கள் உடுப்புகள் அழுக்காகி கதவின் பின்னாலும் கட்டிலுக்குக் கீழேயும் மறைந்து கிடந்தாலும் இவள் கண்களிலிருந்து அவை தப்பமுடியாது. அவற்றின் நாற்றத்தையெல்லாம் எப்படித்தான் சகிக்கிறாளோ அறியேன். அவற்றைத் தேடித்தேடிப் பொறுக்கிய கையோடு தோய்த்து மடித்து அவரவர் அலுமாரியில் அன்றுதான் வாங்கிவந்ததுபோல் அடுக்கிவைத்து அழகு பார்ப்பாள்.

கிழமைக்கு முப்பது முறையாவது குசினியோடு தன்னைக் கட்டிப்போடுவாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி டின்னர். அதில் ஒரு இரவு விருந்தினர் வருகைக்காகச் செய்த விஷேட அயிட்டங்கள் அடங்கியிருக்கும். உணவுப் பேணிகள் எதுவும் மிஞ்சிப்போயிருந்தால் அவற்றை உள்ளூர் உணவு வங்கியில் கொண்டுபோய்க் கொடுத்துவிடுவாள்.

மருந்துகள் மாயங்கள் எதையும் அவளுக்குத் தெரியாமல் நாங்கள் வீட்டில் வைத்திருக்கமுடியாது. வெறும் தலையிடி, தடிமன் மருந்துகளைக்கூட மிகக் கவனமாகப் பேணி வைத்திருப்பாள். அவற்றைக் கண்டபடி போட அனுமதிக்கமாட்டாள். மொத்தத்தில் எங்கள் வீட்டு வைத்தியரும் அவளேதான். ஏதேனும் காரணத்தால் மனம் சோர்ந்து, உடல் சோர்ந்தபோது உடனடி வைத்தியம் அவளிடமுண்டு. அது அவளுடைய சிரிப்பும் அணைப்பும் மட்டுமே. நாம் வீட்டுக்கு வெளியே போகமுன் அவளை ‘ஹக்’ பண்ணாமல் போகமுடியாது.

வீட்டில் ஒரு தூசு, தும்பு அவள் கண்ணிலிருந்து தப்பமுடியாது. எந்த நேரமும் வீட்டைப் ‘பளிச்’சென வைத்துக்கொள்வாள். நானும் பிள்ளைகளும் கண்ட இடங்களிலும் விட்டெறிந்த பேனை, புத்தகங்கள், கை துடைத்த கடதாசிகள் போன்றவை அடுத்த நாட்காலை அவற்றிற்குரிய இடங்களைச் சென்றடைந்துவிடும். இதைப்பற்றி எங்களை ஒரு சொல் குறை சொல்லமாட்டாள். நாங்கள் மாலை வீடு திரும்பும்போது நேற்றுத்தான் குடிபுகுந்த வீடுபோலிருக்கும்.

என்றாலும் என்ன, அவள் வேலை செய்வதில்லை.

காலை பத்து மணி முதல் ஒரு மணிவரை எங்கள் நகரச் சமூக நிலைய நூலகத்தில் தொண்டராகக் கடமை செய்வாள். வீட்டுக்குத் திரும்பும்போது தான் வாசிக்கவெனக் கை நிறையப் புத்தகங்களும் வார இதழ்களும் கொண்டுவருவாள். பத்திரிகைகளிலும் விளம்பரங்களிலும் வரும் கூப்பன்களை வெட்டுயெடுத்துப் பேணிவைத்திருப்பாள். கடைக்கு மரக்கறி, சாமான்கள் வாங்கப் போனால் வேட்டிவைத்த கூப்பன்களைக் கொடுத்து எமது செலவில் ஒரு பகுதியைச் சேமித்துக்கொள்வாள். கடையில் கண்டதையும் வாங்கமாட்டாள். நமக்குத் தேவையான எவை மலிவு விற்பனையில் உள்ளனவோ அவற்றைமட்டுமே வாங்குவாள்.

இதுவும் செய்கிறாள், இன்னமும் செய்கிறாள். ஆனால் வேலை மட்டும் செய்வதில்லை.

என் குடும்ப வரவுசெலவுத் திட்டமும் அவள் ஏற்பாடுதான். எந்தெந்த ‘பில்லுகள்’ எப்பெப்போ கட்டவேண்டும், கார்க்கடனில் எவ்வளவு நிலுவையில் இருக்கிறது, காருக்கு ‘சேர்விஸ்’ எப்போ செய்யவேண்டும், பள்ளிக்கூடங்களுக்கு எவ்வளவு அளக்கவேண்டும், வீட்டுக்கடன் எப்போ புதுப்பிக்கவேண்டும் – எல்லா விபரங்களும் விரல் நுனியில் வைத்திருப்பாள்.

அவளுடைய உறவினர்கள், என்னுடைய ஆட்கள் என்று பாகுபாடு இல்லாமல் அவர்களுடைய குடும்பங்களில் ஒருவரும் விடாமல் பிறந்த நாள், திருமண நினைவு நாள் என்று எதையெல்லாம் அவர்கள் கொண்டாடுகிறார்களோ அந்தத் தினங்களையெல்லாம் மனப்பாடம் பண்ணிவைத்திருந்து உரிய நேரத்தில் அவர்களைக் கூப்பிட்டு வாழ்த்துச் சொல்லுவாள். நத்தார் தினமும் புதுவருடமும் வந்துவிட்டால் வீடு களைகட்டிவிடும். போன வருட லிஸ்டிலும் பார்க்க இந்த வருடம் வேண்டியவர்களின் தொகை கூடிவிடும். என்றாலும் இவர்கள் எல்லாருக்கும் வாழ்த்து மடல்கள் அனுப்பியோ தொலைபேசியில் அழைத்தோ எமது குடும்பத்தின் வாழ்த்துகளைத் தெரிவிக்க மறக்கமாட்டாள்.

ஆனால் இவள் இப்போ வேலை செய்கிறாளோ என்று கேட்பவர்களுக்கு, “வேலை எங்கே செய்கிறாள்” என்றுதான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

மனிதரால் கண்டுபிடிக்கமுடியாத தொலைந்துபோன பொருள் எதுவும் இவளின் கண்களிலிருந்து தப்பமுடியாது. நாம் தேட வெளிக்கிட்ட அடுத்த நிமிடம் அதைக் கண்முன்னே கொண்டுவந்து நீட்டுவாள். சொன்னால் நம்பமாட்டீர்கள், கிழமைக்கு நான்கு முறையாவது குறைந்தது ஆறு கிலோ மீட்டராவது வீதியோர நடைபாதையில் வீச்சு நடை போடுவாள். வழியில் நாய்களையும் அவற்றின் எசமானர்களையும் ஒரேமாதிரி மதிப்பாள். அக்கம்பக்கதில் உள்ளவர்களின் கார்களின் பெயர்கள் மட்டுமே எனக்குத் தெரியும். ஆனால் இவளோ அவர்களையெல்லாம் சினேகிதம் பிடித்து வைத்திருக்கிறாள்.

ஆனால் அவள் வேலை செய்கிறாளா. ம்ஹூம், அதுமட்டும் இல்லை.

இப்போது அவள் இல்லத்தரசி, தாய், மனைவி, சமூக சேவகி மட்டுமே.

பிள்ளைகள் வளர்ந்து படிப்புகளை முடித்து உத்தியோகங்களைத் தேடிக் கடைசியில், வளர்ந்த கூட்டைவிட்டுப் பறந்து சென்றபிறகு இவளுக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கக்கூடும் அப்போது மீண்டும் வேலைக்குப் போகக்கூடும். ஆனால் தற்சமயம் இவள் மிகவும் ‘பிஸி’யாக இருக்கிறாள்.

No comments:

Post a Comment