Saturday, February 9, 2013

மதுரை நான் பிறந்து வளர்ந்த ஊர்

மதுரையின் வரலாறு 

தமிழ்நாட்டின் தலை சிறந்த நகரங்களில் ஒன்று மதுரை. தமிழ் நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்று. சுமார் 2500 ஆண்டுகள் வரலாறு உடையது. மூவேந்தர்களில் ஒருவராம் பாண்டிய மன்னர்களின் தலை நகரம். வைகை ஆற்றங்கரையில் அமைந்த நகரம். நான்கு சங்கங்கள் வைத்து தாய் மொழியாம் தமிழ் மொழியை வளர்த்த நகரம். பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆகியோரால் ஆளப்பெற்றது. இந்து கடவுள் மீனாட்சி பிறந்த இடமாக மதுரை கருதப்படுகிறது. ஆகவேதான் உலகப்புகழ் பெற்ற இந்து சமயத்தின் முக்கிய தளமான மீனாட்சி அம்மன் கோவிலை தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. மதுரை தமிழின் ஐம்ப்ருங்காப்பியங்களின் ஒன்றான சிலப்பதிகாரம் கதையின்படி அதன் நாயகி கண்ணகியால் ஒரு முறை எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம் தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது. கிபி 1 முதல் 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் வசம் இருந்தது. விஜயநகரப் பேரரசு மூலம் அந்த சுல்தான்களின் பொற்காலஆட்சி முறியடிக்கப்பட்டு 1520ல் விஜயநகரர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்கள் ஆட்சியாண்டில் 1623முதல் 1659வரையிலான மன்னர் திருமலையின் ஆட்சி மீனாட்சியம்மன் கோயிலுக்கும் மதுரைக்கும் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது. 1736ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801ல் ஆங்கிலேயரிடம் சென்றது. ஆங்கிலேயர்கள் இவ்விடத்தின் கலைப் பொருட்களை வளர்க்காவிட்டாலும், அழிக்கவில்லை.தற்போதைய மதுரையின் மையப்பகுதி பெரும்பாலும் நாயக்கர்களால் கட்டப்பட்டதாகும். கோயில், மன்னர் அரண்மனை நடுவிலிருக்க, அதனைச் சுற்றி வீதிகளையும் குடியிருப்புகளையும் அமைக்கும், இந்து நகர அமைப்பான "சதுர மண்டல முறை" மதுரையில் பின்பற்றப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், காந்தி அருங்காட்சியகம் என்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் நிறைய இருக்கிறது. தூங்கா நகரமான மதுரைக்கு அருகில் அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற இந்துமதத்தின் சிறப்புமிக்க சில தலங்கள் அமைந்துள்ள ஊர்கள் உள்ளன.

இது தவிர எக்கோ பார்க், ஜிகர்தாண்டா, வைகை நதி, சித்திரை திருவிழா மற்றும் மல்லி என பல சிறப்புகள் மதுரைக்கு மட்டுமே சொந்தம். 

Posted by மதுரைக்காரன்.

No comments:

Post a Comment