சென்னை: சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராஜராஜ சோழனின் கல்லறையையோ, நினைவுத் தூண் அமைந்த இடத்தையோ அறிய முடியவில்லையே, என முதல்வர் கருணாநிதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
“அண்மையில் நடைபெற்ற இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை இணைத்து பார்க்கும்போது, எனக்கு ஒருபக்கம் பிரமிப்பாகவும், பெருமையாகவும் இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் இருக்கிறது.
20.9.2010 அன்று நாகர்கோவிலில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற எழுச்சிமிகு தி.மு.க. முப்பெரும்விழா நடைபெற்றது. அந்த விழாவில், `தந்தை பெரியார் விருதினை’ தம்பி வீரபாண்டி ஆறுமுகத்திற்கும்; `அண்ணா விருதினை’ செ.குப்புசாமிக்கும்; `பாவேந்தர் பாரதிதாசன் விருதினை’ ராஜம் ஜானுக்கும்; ‘கலைஞர் விருதினை’ ஜி.எம்.ஷாவிற்கும் வழங்கி; முரசொலி அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு பரிசு-சான்றிதழ், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நற்சான்று-பணமுடிப்பு-பதக்கம் மற்றும் தி.மு.க. அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு நிதியளித்து; நான் உரையாற்றியபோது…
“நான் பேசுகின்ற இந்த இடம் நாகர்கோவில். ஆதித்தமிழன் தோன்றிய இடம். ஏதோ கற்பனையாக சொல்லப்படுவது அல்ல; லெமூரியா கண்டம் இருந்த பகுதியிலேதான் நாம் இன்றைக்குக் கூடியிருக்கிறோம். இந்த லெமூரியாக் கண்டம்தான் மாற்றமடைந்து, கன்னியாகுமரி மாவட்டமாக விளங்கி-இன்றைக்கு “லெமூரியா” என்ற பெயரை உச்சரிக்கின்ற அளவுக்கு நம்முடைய பழம்பெரும் புலவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இவர்களெல்லாம் எடுத்துக்கூறிய அந்த ஆதாரங்களுக்கு விளக்கமாகத் திகழ்கின்ற இந்த நாகர்கோவில் நகரம்!
நாகர் என்றால் வேறு யாருமல்ல-நாகர் என்றால் அது நம்மை குறிப்பிடுவதுதான். நாகர் என்றால் வேறு யாரோ எவரோ என்று யாரும் கருத தேவையில்லை. இனவழி நாகர்க்கு உரிமையான பெரும்பரப்பு, நாகரிக பண்பாட்டின் உறைவிடமாக இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இன்றைக்கும் “நாகர்கோவில்” வட்டாரம் காண்கிறோம். நாகப்பட்டினம், நாகர்கோவில் இவைகளெல்லாம் தமிழர்களுடைய பழம்பெரும் பூமிக்கான அடையாளங்கள்.
கன்னியாகுமரி உள்ளிட்ட இந்த இடத்தை லெமூரியா கண்டம் என்று அழைத்த அந்த காலத்தில், நாமெல்லாம் தோன்றா விட்டாலும் கூட, நம்முடைய முன்னோர்கள் தோன்றிய இடம்தான் இந்த இடம். அப்படிப்பட்ட முன்னோர்கள் விதைத்த நாகரிகம்தான் கொஞ்சம்கொஞ்சமாக சிறிதுசிறிதாக, படிப்படியாக வளர்ச்சியுற்ற அந்த பரிணாம வளர்ச்சிதான் இன்றைக்கு நாம் அனுபவித்து கொண்டிருக்கின்ற இந்த நாகரிக வளர்ச்சி; அப்படிப்பட்ட பெரும்புகழுக்கும், வரலாற்று சிறப்பிற்கும் உரிய பகுதி இந்த நாகர்கோவில் பகுதி.
அப்படிப்பட்ட பழம்பெரும் பூமியில்-வரலாற்று சிறப்புவாய்ந்த பூமியில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய மக்களின் சந்ததிகள் நாம். நம்முடைய கலாசாரம் தனி கலாசாரம். அதற்கு பெயர்தான் திராவிட கலாசாரம். திராவிட கலாசாரம் என்று சொல்லும்போது, அதிலே என்ன முக்கியமான பொருள் என்றால், ஏதோ இன்னொரு கலாசாரம் இருக்கிறது, அதனால் தான் இதனை திராவிட கலாசாரம் என்று பிரித்துச் சொல்கிறோம் என்ற அந்த வேறுபாட்டை பொதுவிலே உணரக்கூடியவர்கள் உண்டு. ஆரிய கலாசாரத்தை பிரித்துக்காட்ட, நாம் திராவிட கலாசாரத்தை சொல்ல வேண்டியிருக்கிறது.
திராவிட கலாசாரத்தில் ஊறி வளர்ந்தவர்கள் நாம். அதனால்தான், இந்த இயக்கத்திற்கு, திராவிட முன்னேற்றக்கழகம் என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றால், திராவிட கலாசாரத்தை வாழ்த்த, திராவிட கலாசாரத்தை போற்ற, திராவிட கலாசாரத்தை வெற்றி கொள்ள செய்ய, நாம் உருவாக்கியிருக்கின்ற கழகத்திற்கு பெயர் தான் திராவிட முன்னேற்றக்கழகம் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அல்லது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய திராவிட பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியை குறிப்பிட்டு காட்டினேன்.
“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்தகுடி” திராவிட இனம் என்பது வாழையடி வாழையாக வரும் மரபு. அதைப்போலவே, தமிழரின் கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இராஜராஜனின் தஞ்சைப் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா-லட்சோப லட்சம் தமிழ் மக்கள் பங்கேற்க-தஞ்சை மாநகரில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
அந்த விழாவில், நிறைவுரை ஆற்றும்போது, தென்னிந்திய வரலாற்றில் மிகவும் படைப்பாற்றல் நிறைந்த சோழர் காலத்தின் அருமைபெருமைகளை எல்லாம் எடுத்துச்சொல்லி; அவர்கள் கையாண்ட வெளிநாட்டு வாணிகம், கடல் வாணிகம், செய்முறைகள் ஆகியவற்றின் நுணுக்கங்களைபற்றியெல்லாம் விளக்கி உரைத்து, 176 ஆண்டுகள் சோழப்பேரரசு தென்னகத்திலே நிலைத்து வாழ்ந்தது என்பதற்கான ஆதாரங்களை நீலகண்ட சாஸ்திரி, காத்யாயனர் போன்ற ஆய்வாளர்களின் கருத்துகளை எடுத்துவைத்து, நான் ஆற்றிய உரையில்:-
“இராஜராஜனுடைய நிர்வாகம் அனைத்து மன்னர்களுக்கும் ஒரு உதாரணமாக விளங்கியது. எல்லா எல்லைகளிலும் காவல் படைகள்; சிங்கம்போல் சாம்ராஜ்யத்தை சுற்றி வருவதற்கு மகன் ராஜேந்திரன். புதிதாக வென்ற நாடுகளில் பழைய நம்பிக்கையான அதிகாரிகள். அரசியல் அறிவும், கூர்மதியும் கொண்ட அலுவலாளர்கள் எல்லோரையும் தன்னிடத்திலே வைத்துக்கொள்ளும் சாதுர்யம் பெற்றிருந்தார் ராஜேந்திரன்”-என்று குறிப்பிட்டு; இராஜராஜசோழன் காலத்தில் நிர்வாகத்தில் அறிமுகம் செய்துவைத்த நில அளவை முறை, நீட்டல் அளவை முறை, நிறுத்தல் அளவை முறை, ஊராட்சிக்கான குடவோலை முறை ஆகியவற்றை பற்றியெல்லாம் எடுத்துரைத்தேன். இது ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் சரித்திரம்.
இவையனைத்திற்கும் ஆதாரங்களாக இராஜராஜனே எழுப்பியிருக்கும் தஞ்சை பெரியகோவிலும், பொறித்து வைத்திருக்கும் கல்வெட்டுகளும் நீடித்து நிலைத்திருக்கும் சான்றுகளாக நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன.
30.9.2010 அன்று அயோத்தி சம்பந்தமான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரித்து, இரண்டு இந்து அமைப்புகளுக்கும், ஒரு முஸ்லிம் அமைப்பிற்கும் சமமாக வழங்கவேண்டு மென்று தீர்ப்பு சொல்லப்பட்டது. நீதிபதி டி.வி.சர்மா என்பவர் தனது தீர்ப்பில், “சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டிடம் எழுப்பப்பட்டது. எந்த வருடம் என்பது நிச்சயமாக தெரியவில்லை. சர்ச்சைக்குரிய இடத்தில் 1949-ம் ஆண்டில் டிசம்பர் 22-ந்தேதி நள்ளிரவில், சிலைகள் வைக்கப்பட்டன. சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் பிறந்த இடமாக கருதி, இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை புனிதத்தலமாக கருதி, ஆன்மிக பயணம் சென்று வருகிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ராமர் கிருதயுகத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்குமுன், நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு உறுதியாக வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பை பார்க்கும்போது; சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது;
ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து-தென்னகத்தையே கட்டி ஆண்ட மாமன்னன் இராஜராஜசோழன் மறைந்தவிதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கான நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது.
திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும்கூட, லெமூரியா கண்டத்தை பற்றிய ஆராய்ச்சி, சிந்துவெளி நாகரிகத்தை பற்றிய ஆராய்ச்சி, தமிழ்மொழியை பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக, வெளிநாடுகளை சேர்ந்த தொல்லியல் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் திராவிட நாகரிகம் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த அடிப்படையில்-நம்முடைய திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்பொழுது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றினை தெளிவாக உலகம் அறிந்துகொள்ளமுடியும். ஆனால், திராவிட இனத்தை புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம் அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூடநம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாக செயல்பட்டிருக்கிறது என்பதை நீ அறிந்துகொண்டால் போதும்,” என்று கூறியுள்ளார் கருணாநிதி.